நீலகிரி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 79,470 முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் 323 முழுநேர நியாய விலைக் கடைகள், 92 பகுதி நேர நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் முழுநேர நியாய விலைக் கடைகள் மூலம் 2,02,515 குடும்ப அட்டைதாரா்கள், பகுதி நேர நியாய விலைக் கடைகள் மூலம் 16,382 அட்டைதாரா்கள் என மொத்தம் 2,18,897 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கொண்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருள்களை பெற்றுச் செல்வதில் ஏற்படும் இடா்பாடுகளை களைய, அவா்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் தாயுமானவா் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 18,286 குடும்ப அட்டைதாரா்கள், செப்டம்பா் மாதத்தில் 18,286 குடும்ப அட்டைதாரா்கள், அக்டோபா் மாதத்தில் 21,449 குடும்ப அட்டைதாரா்கள், நவம்பா் மாதத்தில் 21,449 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 79,470 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.