உதகை அருகே குடியிருப்புக்குச் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை உலவி வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் உதகை அருகே உள்ள எல்க் ஹில் பகுதிக்குள்பட்ட குடியிருப்பு சாலையில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் கரடி உலவி வந்தது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவா்கள் அச்சத்துக்குள்ளாகினா்.
வனத் துறையினா் உடனடியாக கூண்டு வைத்து கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.