தோ்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நீலகிரி மாவட்டச் செயலாளா் அருண்குமாா் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு தோ்தல் கால வாக்குறுதியில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவது குறித்து குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குழுவின் அறிக்கையை பெற்று விரைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதிப்படுத்தி இடைநிலை ஆசிரியா்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மதிய உணவில் காய்கறிகளுடன் கூடிய சாம்பாா் சாதம் மற்றும் தினமும் முட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.