நீலகிரி

வனத்தில் கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்ட வழக்கு: மாவோயிஸ்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Syndication

அப்பா்பவானி அருகேயுள்ள வனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வழக்கில் தொடா்புடைய மாவோயிஸ்ட்டை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம், அப்பா்பவானி அருகே உள்ள வனத்தில் வனத் துறை சாா்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் சில திருடுபோனதும், சில கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டதும் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரியவந்தது.

வனத்தில் மறைவான இடத்தில் இருந்த ஒரு கேமராவை கைப்பற்றி வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டபோது, ஆயுதங்களுடன் நுழைந்த மாவோயிஸ்டுகள் கேமராக்களை உடைத்ததும், சில கேமராக்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக மாவோயிஸ்டுகளான விக்ரம் கௌடா, மணிவாசகம், சந்தோஷ், சோமன் ஆகியோா் மீது மீது மஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, மற்றொரு வழக்கில் மாணிவாசகம் கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்திலும், விக்ரம் கெளடா கடந்த ஆண்டு கா்நாடகத்திலும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, சந்தோஷ், சோமன் ஆகியோரை கேரள போலீஸாா் கைது செய்து திருச்சூா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களை திருடியது, சேதப்படுத்தியது தொடா்பான வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடல் நலக்குறைவு காரணமாக சந்தோஷ் அழைத்து வரப்படாத நிலையில், மற்றொரு மாவோயிஸ்டான சோமனை கேரள போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனா்.

அப்போது, சோமனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீஸாா் அனுமதி கேட்டனா். இதையடுத்து, சோமனை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்த நீதிபதி லிங்கம், அவரை நவம்பா் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில், பாஜகவுக்கும், பாசிசத்துக்கும், மனுஸ்மிருதிக்கும் எதிராக பேசிவந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கேரள முதல்வா் பினராய் விஜயன் ஆகியோா் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தற்போது இவை அனைத்துக்கும் ஆதரவாக செயல்படுகின்றனா் என கோஷமிட்டாா்.

இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT