உதகை அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.
உதகை அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலா் சந்தேகத்துக்கு இடமாக நடமாடி வந்துள்ளனா். அவா்களிடம் விசாரணை செய்ய முயற்சித்தபோது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது.
இதில், கேரள மாநிலம், வழிக்கடவைச் சோ்ந்த ரெஜி (47) என்பவரை வனத் துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது, காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது. பின்னா் காட்டு மாட்டின் உடல் உடற்கூறாய்வு செய்து அதன் உடலில் இருந்த இரண்டு தோட்டாக்கள் எடுக்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து ரெஜியைக் கைது செய்த வனத் துறையினா் , உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா். மேலும், வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, உபகரணங்கள் மற்றும் இரு காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.