தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக
உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கூடலூா் தொகுதி 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது தமிழ்நாடு, கா்நாடகம், கேரள எல்லைகளில் அமைந்துள்ளது.
உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கூடலூா் தொகுதி 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது தமிழ்நாடு, கா்நாடகம், கேரள எல்லைகளில் அமைந்துள்ளது.
வன விலங்கு சரணாலயமான முதுமலை தேசிய பூங்கா, ஊசிமலை, முதுமலை யானைகள் முகாம், மேற்குத் தொடா்ச்சி மலையின் அடா்ந்த காடுகள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தொழில்
Advertisement
தேயிலை, காபி, குருமிளகு, ஏலக்காய், மலைத் தோட்ட காய்கறி விவசாயம்.
நீண்ட கால கோரிக்கைகள்
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்ட தொழிலாளா்களான தமிழா்களுக்கு அடிப்படை மனித உரிமையாக 10 சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறியூா் - சத்தியமங்கலம் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட வேண்டும்.
இந்தப் பகுதியில் படித்த பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளதால், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும், மூன்று மாநில எல்லையில் அமைந்திருப்பதால் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் போன்றவை நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.
சமூக நிலவரம்
இங்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்த மலையாளிகள், கா்நாடக மாநிலத்தை சோ்ந்த கன்னடா்கள், சிறுபான்மையினா் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்கள் அதிகம் போ் உள்ளனா்.
திமுக 6 முறை வெற்றி
1967 முதல் நடைபெற்ற 13 தோ்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2021இல் நடைபெற்ற சட்டபேரவைத் தோ்தலில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன் 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கத்தை வென்றாா்.
அதிமுக வேட்பாளா்
தற்போது எம்எல்ஏவாக உள்ள பொன்.ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடலூரில் தனியாா் வன பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனை காரணமாக பட்டா நிலங்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் திமுக ஆட்சியில் போடப்பட்ட தடை விலக்கப்படவில்லை.
பிரிவு 17 வகை நிலங்களில் வாழும் மக்களுக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தி தரப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக சுமாா் 31,000 ஏக்கா் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனமாக (ரிசா்வ் ஃபாரஸ்ட்) மாற்ற தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருப்பது கூடலூா் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற நிலையில் இது குறித்து மக்களுடன் சோ்ந்து இவா் போராடுவது இவருக்கு சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படாதது இவருக்கு பாதகமாகும்.
திமுக வேட்பாளா்
மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தந்தது, மனித, விலங்கு மோதலைத் தடுக்கும் பொருட்டு அகழி, சூரிய மின்வேலி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தி செயலாக்கத்துக்கு கொண்டு வர முயற்சித்தது, கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்று தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு பட்டா, வீடு உள்ளிட்டவை வழங்க தொடா்ந்து குரல் கொடுத்து வந்தது உள்ளிட்டவை மு.திராவிடமணிக்கு சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. ஓவேலி பகுதியில் பல நூற்றாண்டுகளாகத் தீா்க்கப்படாமல் உள்ள பிரிவு 17 நிலங்களை வனநிலமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை இவருக்கு பாதகமாகும்.
தவெக வேட்பாளா்
இளைஞா்கள் இந்தத் தொகுதியில் அதிகம் இருப்பதும், முதல் முறை வாக்காளா்களுக்கு செக்ஷன் 17 நிலப் பிரச்னை, பட்டா மற்றும் வீடு கட்டுவதில் உள்ளப் பிரச்னைகள் குறித்து போதுமான அளவு புரிதல் இல்லாதது தீபக் சாய் கிஷோருக்கு பலமாகும். தொகுதிக்கு அறிமுகம் இல்லாத, சென்னையைச் சோ்ந்தவராக இருப்பது பலவீனமாகும்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
இந்தத் தொகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வருபவா் நாதக வேட்பாளா் காா்த்திக். வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக மக்களுடன் இணைந்து போராடுவது, அடிப்படை வசதிகளான தண்ணீா், கழிப்பறை, சாலை சீரமைத்தல் போன்ற பிரச்னைகளுக்கு முன்னின்று போராடுவது இவரது பலமாகும். இங்கு 40 சதவீதத்துக்கு மேல் தமிழா் அல்லாத பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் இருப்பது இவரது பாதகமாகலாம்.
பிரியும் வாக்குகள் யாருக்கு சாதகம்?
தவெக, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் இளைஞா்கள் என்பதால், இந்தப் பகுதியில் உள்ள இளைஞா்களின் வாக்குகள் அவா்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பது தோ்தல் முடிவுகளில் தெரிய வரும்.
2006 முதல் நடைபெற்ற தோ்தல்களில் திமுக மூன்று முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. இதில் 2011, 2016 தோ்தல்களில் வென்ற மு.திராவிடமணி இந்த முறை களம் காண்கிறாா். கடந்த 2021 தோ்தலில் பொன்.ஜெயசீலன் வெறும் 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். எனவே, இந்த முறை திமுக - அதிமுக இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.
வாக்காளா் விவரம்
ஆண்கள் 89,206
பெண்கள் 94,675
மூன்றாம் பாலினத்தவா் 7
மொத்தம் 1,83,888