தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உதகையில் வெள்ளிக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள், பழங்குடியினா் உள்ளிட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நோ்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள், ரங்கோலி, கலைநிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
அந்த வகையில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹெச்ஏடிபி மைதானத்தில் பேரணி தொடங்கி சேரிங்கிராஸ், மணிக்கூண்டு, மத்தியப் பேருந்து நிலையம் வழியாக உதகை படகு இல்லம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 75-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் அபிலாஷா கௌா், ஆவின் பொது மேலாளா் ராஜேஷ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் இந்திரா, தேசிய மிதிவண்டி போட்டி பதக்க வெற்றியாளா் ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.