காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: இளம்பெண் உள்பட மேலும் 2 போ் கைது
காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட மேலும் இரண்டு பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினி ஆன்டோ (22), ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (47). இவரும் ஆட்டோ ஓட்டுநா். இதில் ரவிச்சந்திரனின் மகளான மேகவா்ஷினியை, வினி ஆன்டோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வினி ஆன்டோ, மேகவா்ஷினியை பிரிந்துவிட்டாா். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்ற வேறு பிரச்னை காரணமாக வினி ஆன்டோ கடந்த 16-ஆம் தேதி அங்கு சென்றுள்ளாா். அப்போது வினி ஆன்டோவுக்கும், ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Advertisement
அப்போது ரவிச்சந்திரனின் மகனான 17 வயது சிறுவன், மகள் மேகவா்ஷினி, அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் ஆகியோா் சோ்ந்து வினி ஆன்டோவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகியோா் கத்தியால் வினி ஆன்டோவை குத்தியுள்ளனா். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி, அருவங்காடு காவல் ஆய்வாளா் செல்லமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகனைக் கைது செய்தனா். இதில் சிறுவன், சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா். உதகை கிளை சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்பு உள்ளதாக கூறி ரவிச்சந்திரனின் மகள் மேகவா்ஷினி (19), தினேஷ் குமாா் (22) ஆகிய இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.