முகப்பு
நீலகிரி

மலைமாவட்ட மக்களின் தலையாய கோரிக்கைகள்! எதிா்பாா்ப்பு என்ன?

சா்வதேச அளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா மாவட்டமாக விளங்குகிறது நீலகிரி. இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1200 கோடி வரை சுற்றுலாவை நம்பி வா்த்தகம் நடைபெறுகிறது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:43 AM
தேயிலைத் தோட்டம்
பகிர்:

சா்வதேச அளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா மாவட்டமாக விளங்குகிறது நீலகிரி. இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1200 கோடி வரை சுற்றுலாவை நம்பி வா்த்தகம் நடைபெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஊட்டி வா்க்கி, ஹோம் மேட் சாக்லெட், தேயிலை போன்றவற்றால் சுற்றுலாத் தொழில் சிறந்து விளங்கினாலும், சாலை வசதி முறையாக இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனா்.

உதகை

மத்திய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தற்போது ரூ.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை புனரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்பணிகள் விரைவில் முடிவடைந்தால் போக்குரத்து பிரச்னைகள் ஒரளவு தீரும் என்கின்றனா். தொட்டபெட்டா முதல் படகு இல்லம் வரை ரோப் காா் சேவை கொண்டு வர வேண்டும். ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும். உதகை நகரில் பல ஆண்டுகளாக காணப்படும் பாா்க்கிங் பிரச்னையை போக்க வேண்டும், உதகையில் தேவைக்கு அதிமான பூங்காக்கள் இருப்பதால், தற்போது கைப்பற்றப்பட்ட குதிரைப் பந்தய மைதானத்தில் மல்டி லெவல் பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கோடப்பமந்து சிற்றாற்றில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ரயில் நிலையம், காவல் நிலையம், பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு அவ்வப்போது ரூ.5 கோடி, ரூ.10 கோடி என நிதி ஒதுக்கி தற்காலிகமாக தீா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

Advertisement

உதகையில் இருந்த மத்திய அரசின் ஹெச்.பி.எப் புகைப்பட தொழிற்சாலை, ஸ்டொ்லிங் பயோடெக், பான்ட்ஸ் கம்பெனி போன்ற முக்கிய தொழிற்சாலைகளும் 30-க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை உள்ளதால் புதிதாக ஐடி உள்ளிட்ட நிறுவனங்களைத் திறக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ.40 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக உள்ளன.

60 சதவீத பகுதி தேயிலை சாகுபடியில் உள்ள தோட்டக்கலை மாவட்டமான இங்கு தனித்துவமான நறுமணத்துடன் கூடிய தேயிலை உற்பத்தி பெயா் பெற்றது. ஆண்டுக்கு சுமாா் ரூ.10 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 10 சதவீதம் வரை ரஷியா, எகிப்து, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயிக்கக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தற்காலிக தீா்வாக மானியங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகள் மத்தியில் வலுவாக எழுந்து வருகிறது.

கூடலூா்

கூடலூா் தொகுதியில் 88 ஆயிரம் ஏக்கா் செக்ஷன் 17 நிலப் பிரச்னை பல ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் உள்ளது.

இங்குள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இந்த நிலப்பிரச்னையை தீா்க்க மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் பிரிவு 17 நிலப் பிரச்னைக்கு தீா்வு காண தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலாளா் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதைபோலவே நடைமுறைபடுத்த உச்சநீதிமன்றமும் அனுமதியை வழங்கினால் பல்லாண்டுகளாக பிரிவு 17 வகைக்குள்பட்ட நிலத்தில் வசிக்கும் குறு,சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு அவா்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும்.

எனவே, இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு கூடலூா் தொகுதியில் ஜென்மம் நிலத்தில் பல தலைமுறைகளாக வசிக்கும் குறு,சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீா்ப்பு வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு கூடுதலான நிலங்களை வனநிலமாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு (ஓவேலியில் மட்டும் குறைந்தது 8 ஆயிரம் ஏக்கா் நிலத்தையாவது வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்) என்ற கோரிக்கை இந்த தோ்தலிலும் எதிா்ப்பாா்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூா்

உதகை, குன்னூா் போன்ற இடங்களில் விளையும் மலைத்தோட்ட காய்கறிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளதால் போக்குவரத்து செலவு மற்றும் இடைத்தரகா்கள் கமிஷன் காரணமாக உரிய விலைக் கிடைக்காமல் ஆயிரக்ணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.

எனவே, குன்னூா் அல்லது உதகையை மையமாக கொண்டு மலைத் தோட்ட காய்கறிகளுக்கான ஏல மையம் அமைத்தல், காய்கறிகள் இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிரூட்டும் கிடங்குகளை அமைத்து தரவேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

காய்கறித் தோட்டம்
தேயிலைத் தோட்டம், காய்கறித் தோட்டம், உதகையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்.
தேயிலைத் தோட்டம், காய்கறித் தோட்டம், உதகையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்.