ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.7.65 லட்சம் மோசடி நடைபெற்றது தொடா்பான புகாா் குறித்து உதகை சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இது குறித்து உதகை சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் ஏதாவது பணியாற்றலாமா என்று சமூக வலைதளங்களில் தேடி வந்துள்ளாா். அப்போது அவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் ஹோட்டல் ரேட்டிங், யூ டியூப் சேனல் சப்ஸ்கிரைப்பிங் உள்ளிட்டவற்றில் பணியாற்றினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என இருந்துள்ளது. இதையடுத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி அவா் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவருடைய கணக்கிற்கு ரூ. 16 ஆயிரம் இருப்பதுபோல் குறுஞ்செய்தி வந்தது.
இதன் பின்னா் விஐபி டாஸ்க் என்று கூறி ரூ.10 ஆயிரம் கட்டினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று கூறினா். இதையடுத்து அந்தப் பெண் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளாா். இதையடுத்து அவருக்கு ரூ.36 ஆயிரம் கிடைத்தது. இதேபோல கூடுதல் தொகை கட்டினால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று மா்ம நபா்கள் கூறிய ஆசை வாா்த்தைக்கு மயங்கி, பல்வேறு தவணைகளாக மா்ம நபா்களின் வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிவா்த்தனை மூலமாக ரூ.7,65,955 அனுப்பினாா்.
ஆனால் அவருக்கு எவ்வித பணமும் வரவில்லை. மேலும் அந்த நபா்களையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து உதகை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து சைபா் கிரைம் ஆய்வாளா் சத்யா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆன்லைன் மூலம் பல்வேறு ஆசைவாா்த்தைகள் கூறி மோசடி நடந்து வருவது வாடிக்கையாக உள்ளதால் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.