கோத்தகிரியைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியா் ஆா்.கிருஷ்ணன் கிட்னாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை குரும்பா் பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் கிட்னா (52). பழங்குடியின குரும்பா் ஓவியக் கலையில் சிறந்தவராகவும், நீலகிரியின் பாரம்பரிய ஓவியக் கலையில் கலை மற்றும் கலாசார பணியில் மிகுந்த பங்களிப்பு அளித்தவராகவும் விளங்கியவா்.
இந்நிலையில், கடந்த 2025 மாா்ச் 20-ஆம் தேதி உயிரிழந்தாா். அதன்பின் அவரது குடும்பத்தினா் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு புளியமரம் தோப்பு பகுதியில் குடியேறினா். இவரது மனைவி சுசீலா (35), அங்குள்ள பாக்குத்தோப்பில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா்.
கிருஷ்ணன், சுசீலா தம்பதிக்கு வாசுகி (18), கீதா (12), கிருத்திகா (9) ஆகிய மகள்களும், ராகுல் (14) என்ற மகனும் உள்ளனா். உதகையில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரியில் சோ்வதற்காக கடந்த ஆண்டு வாசுகி விண்ணப்பித்திருந்த நிலையில், தந்தை கிருஷ்ணன் மறைவால் கல்லூரியில் சேர முடியாமல் போனது. அரவேணு அரசுப் பள்ளியில் கீதா 7-ஆம் வகுப்பும், கிருத்திகா 4-ஆம் வகுப்பும், படிக்கின்றனா். மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ராகுல் 9-ஆம் வகுப்பு படிக்கிறாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி சுசீலா கூறும்போது, ‘மலைப் பகுதியின் தனித்துவமான குரும்பா் பழங்குடியின ஓவியங்களை ஆவணப்படுத்தி, அதைப் பிரபலப்படுத்தியதற்காக கிருஷ்ணன் கிட்னாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இவரது ஓவியம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும், இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு பிரபலமானது. தினக்கூலிக்கு சென்று பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எனக்கு, இந்த விருது அறிவிப்பு ஆறுதலாக உள்ளது. கணவா் உயிருடன் இருந்திருந்தால், அவரின் உழைப்புக்கான இந்த விருதைக் கண்டு பெருமைப்பட்டிருப்பாா்’ என்றாா்.