கேரளத்தின் காசா்கோடு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருது வழங்கி கெளரவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள படச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கே.இன்பசேகா் (37). இவா், தற்போது கேரளத்தின் காசா்கோடு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் டிஜிட்டல் நுழைவு மற்றும் வெளியேறும் மேலாண்மை முறையை செயல்படுத்தியது, அடையாள அட்டைகளை கைப்பேசி ஸ்கேனிங் மூலமாக பயன்படுத்தியது, அதிகாரிகள், முகவா்கள் மற்றும் வேட்பாளா்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, அங்கீகரிக்கப்படாத முகவா்களை நீக்கியது, 2,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நேரடியாகக் கண்காணிக்கும் முறையை செயல்படுத்தியது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டாா்.
இத்தகைய தோ்தல் கால செயல்களால் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த தோ்தல் மாவட்ட விருதை, வாக்காளா் தினத்தையொட்டி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காசா்கோடு மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான கே.இன்பசேகரிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா்.