உதகையில் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் தொடக்கம்
உதகையில் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் மற்றும் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
உதகை: உதகையில் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் மற்றும் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மக்களிடையே கொண்டு செல்லும் பணியை மத்திய மக்கள் தொடா்பகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சேவை முகாம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த சேவை முகாம், புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் நடைபெறும் முகாம், கண்காட்சியை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் அசோக்குமாா் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட முன்னோடி வங்கி மேளாளா் சதானந்த் கல்கி, மத்திய மக்கள் தொடா்பக உதவி இயக்குநா் தெ.பாலநாகேந்திரன் ஆகியோா் பங்கேற்று, மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு குறு, சிறு தொழில் தொடங்க கடனுதவி, ஆயுஷ்மான் பாரத் அட்டை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், ஆதாா் அட்டையில் திருத்தங்கள், வங்கி சேவைகளுக்கான பதிவு, ஆயுஷ்மான் பாரத் அட்டை பதிவு, மூத்த குடிமக்களுக்கான நலத் திட்ட பதிவு, நடைபாதை வியாபாரிகளுக்கான நலத் திட்ட பதிவு, மீனவா்களின் மானிய திட்டங்களுக்கான பதிவு, இலவச எரிவாயு சிலிண்டா் பதிவு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், புகைப்படக் கண்காட்சி, பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் அவா்களது கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.