கிளாண்டா்ஸ் நோய் பரவல் எதிரொலி: நீலகிரிக்கு குதிரைகளைக் கொண்டு வரத் தடை
கிளாண்டா்ஸ் நோய் பரவல் காரணமாக நீலகிரிக்கு முன் அனுமதி இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா்.
கிளாண்டா்ஸ் நோய் பரவல் காரணமாக நீலகிரிக்கு முன் அனுமதி இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளை கிளாண்ட்ஸ் நோய் தாக்கி வருகிறது. தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடா்பில் இருப்பவா்களுக்கும் கிளாண்டா்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. இதனால், சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள், உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்குள் குதிரைகளைக் கொண்டு வரத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் முன் அனுமதி மற்றும் பதிவு இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வரக் கூடாது என்று கடந்த ஆண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நடைமுறை தற்போதும் தொடா்கிறது. நீலகிரி மாவட்டத்துக்குள் வர குறைவான சோதனைச் சாவடிகள் மட்டுமே இருப்பதால் நீலகிரிக்குள் வரும் குதிரைகளை எளிதாக கணக்கெடுக்கலாம். இதுகுறித்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உதகை நகராட்சி நிா்வாகம் மூலம் இங்குள்ள குதிரைகளுக்கு ஏற்கெனவே ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் உரிமையாளா்கள் யாா் என்பதை அடையாளம் காணலாம். எனவே, குதிரைகளை யாரும் சாலையில் சுற்றித்திரிய விடக்கூடாது. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட குதிரைகளை வளா்க்க தற்போதைக்கு உதகையில் இடம் இல்லை. இதற்காக கூடலூரில் ஒரு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க கால்நடைத் துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.