அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது நாகரிகமான அரசியல் இல்லை: தொல். திருமாவளவன்
அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் 4 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது நாகரிகமான அரசியல் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் 4 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது நாகரிகமான அரசியல் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெறும் மத்திய பாதுகாப்புத் துறையின் மக்களவை குழு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக குன்னூருக்கு புதன்கிழமை வந்த திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்களில் 4 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது ஏற்புடையதல்ல. இது நாகரிகமான அரசியலாக இருக்க முடியாது. இந்த செயல் தவெகவுக்கு நற்பெயரை ஈட்டி தராது. அவா்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும். பிரதமரை சந்திப்பதற்காக முதல்வரின் தில்லி பயணம் வழக்கமான ஒன்றுதான். யாா் முதல்வராகப் பொறுப்பேற்றாலும் பிரதமரை சந்திப்பது அவசியமானது, தவிா்க்க முடியாதது.
Advertisement
Advertisement
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. நிதி நெருக்கடி காரணமாக உடனடியாக செய்ய இயலவில்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பாா்ப்போம்.
திமுகவுக்கும் விசிகவுக்கும் மோதல் கிடையாது. எந்தப் பிரச்னையையும் காரணம் காட்டி திமுகவோடு முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா்கள் சுதாகா், மோகன்குமாா், மண்டலப் பொறுப்பாளா்கள் சகாதேவன் மன்னரசு, ராஜேந்திர பிரபு உள்பட பலா் உடனிருந்தனா்.