மேற்கூரை உடைந்து தச்சுத் தொழிலாளி சாவு: ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு
திருப்பூரில் மேற்கூரை உடைந்து தச்சுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து போலீஸார் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் மேற்கூரை உடைந்து தச்சுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து போலீஸார் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், பி.கே.ஆர். காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55), தச்சுத் தொழிலாளி. இவர், காங்கயம் சாலை, புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏ.தங்கவேல் (60) என்பவருடன் சேர்ந்து குமாரசாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் கல்நார் கூரையை (ஆஸ்பெஸ்டாஸ்) அகற்றும் பணியில் கடந்த திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மேற்கூரை உடைந்ததில், 12 அடி உயரத்திலிருந்து சீனிவாசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், உடனடியாக சீனிவாசனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார், ஒப்பந்ததாரர் தங்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.