சம்பளமின்றித் தவிக்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளமின்றித் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளமின்றித் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயக்குமார் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 750 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. விசாரித்ததில், கல்வித் துறையிலிருந்து ஊதிய உத்தரவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க, நிதித் துறையில் ஒப்புதல் பெற்று, அதனை அந்தந்தக் கருவூலங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால் ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த விஷயத்தை மேலும் தாமதப்படுத்தாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.