காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருப்பூரில் ஏப்ரல் 23-இல் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மனித சங்கிலி போராட்டம் திருப்பூரில் ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை அவிநாசி சாலை நீலகிரி பேக்கரி அருகே நடத்துவது
எனவும், இதில் அனைத்து கட்சிகளின் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டத்தை வெற்றி பெற செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறவினர் சுரேஷ், ஈரோடு தர்மலிங்கம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், டி.கே.டி.நாகராஜ், தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி (திமுக), கிருஷ்ணன், கோபி (காங்கிரஸ்), சிவபாலன், மனோகரன் (மதிமுக), முத்துக்கண்ணன், காமராஜ் (மார்க்சிஸ்ட்), ரவி, நடராஜன் (இந்திய கம்யூனிஸ்ட்), சையத் முஸ்தபா (முஸ்லீம் லீக்), ஆறுமுகம் (திராவிடர் கழகம்), அபுசாலி (மனியநேய மக்கள் கட்சி), முஜிபுர் ரஹ்மான் (தமுமுக), ஈஸ்வரன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்வேந்தன் (விடுதலை சிறுத்தைகள்), ஜீவா.கிட்டு (உழவர் உழைப்பாளர் கட்சி), பிரகாஷ் (திராவிட இயக்க தமிழ் பேரவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.