துலுக்கமுத்தூரில் சாலை மறியல்
அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், துலுக்கமுத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த பல மாதங்களக 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துலுக்கமுத்தூர் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, கலைந்து சென்ற பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர், நல்லிக்கவுண்டம்பாளையத்தில் உடனடியாக குடிநீர் தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.