திருப்பூர்

செவிலியர் தற்கொலை விவகாரம்:  மருத்துவர்கள் பணியிட மாற்றம்

DIN

செவிலியர் தற்கொலை விவகாரம் தொடர்பாக வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 2 பேர் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நரிமேட்டைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மணிமாலா (26). இவர், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு தான் தங்கியிருந்த சுகாதார நிலையக் குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தமயந்தி, மருத்துவர் சக்திஅகிலாண்டேஸ்வரி இருவரும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்றுகூறி,  அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள், செவிலியர் சங்கம், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இந்நிலையில்,  பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு மணிமாலா சடலம் வைக்கப்பட்டிருந்த காங்கயம் அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களாகத் தொடர் போராட்டம் நடந்தது. 
செவிலியர் மணிமாலாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் செவிலியர் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் 
மாவட்ட ஆட்சியர் 
கே .எஸ்.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை இரவு நேரில் சந்தித்து முறையிட்டனர்.அதைத் தொடர்ந்து இவ் விவகாரத்தில் சமரசத் தீர்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர்அறிவுறுத்தினார். 
இதனிடையே காங்கயம் வட்டாட்சியரகத்தில் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணிமாலா மரணத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட  வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்  தமயந்தியை ஈரோடு மாவட்டம், சித்தோட்டுக்கும், மற்றொரு பெண் மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியை திண்டுக்கல் மாவட்டம், செந்துரை  என்ற இடத்துக்கும் பணியிட மாறுதல் செய்ய உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவும், மணிமாலாவின் குடும்பத்தில் ஒருவருக்கு பொது சுகாதாரத் துறையில் பணி வழங்கவும், அவரின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதி கிடைக்கப் பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டம்  புதன்கிழமை அதிகாலை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மணிமாலாவின் உடல் பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT