போலி ஆதார் அட்டை தயாரிப்பு: மேலும் இருவரைத் தேடும் போலீஸார்
போலி ஆதார் அட்டை தயாரிப்பில் ஈடுபட்டதாக மேலும் இருவரை திருப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
போலி ஆதார் அட்டை தயாரிப்பில் ஈடுபட்டதாக மேலும் இருவரை திருப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில், போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி முறைகேடாக தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை திருப்பூர் ஊரக போலீஸார் கடந்த 11ஆம் தேதி கைது செய்தனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டையைத் தயாரித்து கொடுத்ததாக, அவிநாசியில் வசித்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரம்ஷிச வர்மா (34) கைது செய்யப்பட்டார். மேலும், இவருக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்த செளரிமுத்து (54) என்பவரையும் ஊரக போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணை இயக்குநர் அசோக் லெனின் பறிமுதல் செய்யப்பட்ட போலி ஆதார் அட்டைகளைப் பார்வையிட்டார். கைப்பற்றப்பட்ட கணினி, மடிக் கணினி மூலம் யார், யாருக்கு போலி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், போலி ஆதார் அட்டை தயாரிப்பில் ஈடுபட்டதாக திருப்பூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ரவிசங்கர் சிங் (28) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைரேகை ஸ்கேனர்கள், மடிக் கணினி, கேமரா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், இவருடன் சேர்ந்து பிகார் மாநிலத்தை சேர்ந்த மிதுன், இவரது நண்பர் ஆகிய இருவரும் போலி ஆதார் அடையாள அட்டை தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, இந்த இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
.