திருப்பூர்

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது: டிடிவி தினகரன்

DIN

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் கிராமத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காவல் துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்க வகையில் உள்ளன. எம்எல்ஏ கருணாஸை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தான் பேசியது தவறு என ஒப்புக்கொண்ட பின்னரும் அவரை கைது செய்திருக்கக் கூடாது. இது தமிழக அரசின் இரட்டை நிலையைப் பிரதிபலிக்கிறது.
தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.  தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். 
எனவே, தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது என்றார்.
கொங்கு மண்டலப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி,  திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.சண்முகவேலு,  தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வி.சிவகுமார், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெள்ளக்கோவிலில் உற்சாக வரவேற்பு... வெள்ளக்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு வந்த  டி.டி.வி.தினகரனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெள்ளக்கோவில் கடைவீதி,  தாசவநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர் பேசுகையில்,  வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தவும், இப்பகுதிக்கு பொறியியல் கல்லூரி கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
  முன்னதாக,  பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட துணைத் தலைவராக இருந்த வி.பி.இளங்கோ, ஒன்றியச் செயலாளராக இருந்த  நந்தகுமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். 
அமமுக வெள்ளக்கோவில் நகரச் செயலாளர் ஆர்.கணேசன்,  சண்முகராசு மற்றும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் வந்து  டி.டி.வி.தினகரனுக்கு வரவேற்பளித்தனர்.
காங்கயத்தில் பிரசாரம்... காங்கயம் பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.  
இரவு 11 மணி அளவில் வந்த டிடிவி  தினகரன் பேசுகையில், காங்கயத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காங்கயம் காளை மாட்டுக்குச் சிலை அமைக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT