திருப்பூர்

உடுமலை - மூணாறு சாலையில் குட்டிகளுடன் யானைகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

DIN

பிறந்து ஓரிரு நாள்களே ஆன பச்சிளம் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த யானைகளைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் உடுமலை - மூணாறு சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்கள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்த விலங்கினங்கள் தங்களது குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பல கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதியில் நடந்து அமராவதி அணையைத் தேடி வருகின்றன. 

குறிப்பாக கோடை வெப்பத்தைத் தாங்க முடியாத யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அடர்ந்த காட்டை விட்டு வெளியே வருகின்றன. 

இந்நிலையில் வனப் பகுதியை விட்டு அமராவதி அணையை நோக்கி வந்த யானைகள் உடுமலை - மூணாறு சாலையில் வியாழக்கிழமை கூட்டமாக நின்று கொண்டிருந்தன. இதனால் இந்த வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் யானைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 

இதில், பிறந்து ஓரிரு நாள்களே ஆன நிலையில் பச்சிளம் குட்டிகளுடன் வந்த யானைகள் சாலையை வழிமறித்து நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன. 
இதனால் அந்த வழியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. சுற்றுலாப் பயணிகள் குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த அந்த யானைகளைப் புகைப்படங்கள் எடுத்தனர். 

தகவல் கிடைத்ததும் வன அலுவலர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த யானைகளை வனத்துக்குள் விரட்டினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 

வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு: உடுமலை - மூணாறு சாலையில் நின்று கொண்டிருக்கும் யானைகளை அவ்வழியே செல்வோர் புகைப்படம் எடுப்பதுடன் யானைகள் மீது குச்சிகளையும், கற்களையும் வீசி துன்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. 

இதையடுத்து வனத் துறையினர் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் அவற்றைக் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT