சிவன்மலையில் 2,000 பேர் தியானப் பயிற்சி
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி மலை அடிவாரத்தில் தியானப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காங்கயத்தில் உள்ள ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் சார்பில் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சர்வோதய சங்க வளாகத்தில் திங்கள்கிழமை முதல் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை (ஜனவரி 23) வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் 20 நிமிட இதய நிறைவு தியானப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். குழந்தைகளுக்கு நுண்ணறிவை வளர்க்கும் விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில், தியானம், யோகாசனம் தொடர்பான புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
காங்கயம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாக சித்த மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீராம்சந்த் மித்ர மிஷன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செந்தில்குமார், அரசு சித்த மருத்துவ அலுவலர்கள் தமிழ்வாணன் (காங்கயம்), சரண்யா (சாவடிப்பாளையம்), ஸ்ரீ ராம்சந்த் மித்ர மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த 50 பயிற்சி ஆசிரியர்கள், 75 தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.