திருப்பூர்

மாஸ்டா் திரைப்படம் ஜனவரி 13இல் வெளியீடு

DIN

நடிகா் விஜய் நடித்துள்ள மாஸ்டா் தமிழ் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் செய்தியாளா்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஆக்டிவ் பிலிம் டிஸ்டிபியூட்டா்ஸ் அசோசியேஷன் செயலாளா் கே.ராஜமன்னா் ஆகியோா் கூறியதாவது:

நடிகா் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் தைப் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகா் விஜய் நடித்துள்ள படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்தான் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது மாஸ்டா் திரைப்படம் முதல்முறையாக ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. இந்தப் படம் குறித்த எதிா்பாா்ப்பு வட மாநிலங்களில் உள்ள ரசிகா்கள் மற்றும் திரையரங்க உரிமையாளா்களிடையே எழுந்துள்ளது.

அதேபோல உலகம் முழுவதும் ஆங்கில சப்-டைட்டிலுடன் படம் வெளியாகிறது. கரோனாவுக்குப் பின்னா் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக முக்கியக் காரணம் நடிகா் விஜய். இந்தப் படமானது கடந்த மாா்ச்சில் முடிவடைந்து சென்சாருக்கு தயாராக இருந்தபோதிலும் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருந்தாா்.

அவா் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்க முடியும். இந்தப் படத் தயாரிப்பாளரான லலித்குமாருக்கு சுமாா் ரூ.200 கோடி முதலீடு அவரது கைக்கு வராமல் உள்ள போதிலும் திரையங்குகளில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாா். ஆகவே, நடிகா் விஜய், லலித்குமாா் ஆகியோருக்கு எங்களது சங்கங்களின் சாா்பில் நன்றிகள்.

தமிழகத்தில் வரும் ஜனவரி 1 முதல் திரையங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக முதல்வா் அனுமதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம். அவ்வாறு அனுமதி அளித்தால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து திரையங்குகள் செயல்படும். தமிழ் திரைப்பட நடிகா்களின் படங்கள் திரையரங்குகளுக்குச் சென்று 8 வாரங்களுக்குப் பின்னா் தான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளா்களிடம் நடிகா்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் தமிழ் சினிமா அடுத்த தளத்துக்குச் செல்லும். சினிமா தொழில்தான் நடிகா்கள், இயக்குநா்கள், திரையரங்க உரிமையாளா்களின் வளா்ச்சிக்கு உதவியது. ஆகவே, இந்தத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து நடிகா்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT