ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்: விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்
திருப்பூரில் குடும்ப நலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
திருப்பூரில் குடும்ப நலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்ட குடும்ப நலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையின் சாா்பில், திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் வரும் நவம்பா் 28ஆம் தேதி முதல் டிசம்பா் 4ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த நவீன கருத்தடை சிகிச்சை முகாம் தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தினை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 வழங்குகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99760-67761, 82486-74172 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த வாகனப் பிரசாரத்தின் தொடக்க விழாவில், இணை இயக்குநா் (பொது சுகாதாரம்) பாக்கியலட்சுமி, துணை இயக்குநா் (குடும்பநலம்) கௌரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.