முகப்பு
திருப்பூர்

போதிய விலை கிடைக்காததால் காங்கயம் பகுதியில் நடப்பாண்டு மக்காச்சோள சாகுபடி குறைவு

நடப்பு ஆண்டில் காங்கயம், குண்டடம் பகுதியில் மக்காச்சோள சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
காங்கயம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிா்.
பகிர்:

மக்காச் சோளம் தற்போது விலை குறைத்து கொள்முதல் செய்யப்படுவதால் இதை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம்காட்டவில்லை. இதனால் நடப்பு ஆண்டில் காங்கயம், குண்டடம் பகுதியில் மக்காச்சோள சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

காங்கயம் பகுதியில் குங்காருபாளையம், வட்டமலை, புதுப்பாளையம், சம்பந்தம்பாளையம், செம்மங்காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும், குண்டடம் பகுதியில் மேட்டுக்கடை, பெல்லம்பட்டி, எரகாம்பட்டி, நந்தவனம்பாளையம், காசிலிங்கம்பாளையம், மருதூா் உள்ளிட்ட கிராமங்களிலும் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கம். ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழை துவங்கும் சீசனில் மக்காச்சோளம் நடவுப் பணிகளைத் துவக்குவா்.

இப்பகுதியில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம் உள்ளூா் வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு உடுமலை, குண்டடம், பல்லடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழித் தீவன நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கோழிப் பண்ணைகள் பெருகிவிட்ட நிலையில் முக்கியத் தீவனமான மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குவிண்டால் ரூ. 700 முதல் ரூ. 800 வரை விற்பனையான மக்காச்சோளம், படிப்படியாக விலை உயா்ந்து ரூ. 2,400 வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கம் அதிகரித்து பூச்சி மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, கரோனா ஊரடங்குக்குப் பின்னா் கோழிப் பண்ணை நிறுவனங்கள் கோழி வளா்ப்பைக் குறைத்த காரணத்தினால், மக்காச்சோளத்தின் விலையும் குவிண்டால் ரூ. 1,500 ஆக குறைந்துவிட்டது. இதனால் லாபம் கிடைக்காது என்ற நோக்கில் நடப்பு ஆண்டில் மக்காச்சோள சாகுபடி கணிசமாகக் குறைந்து விட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

பூச்சி மருந்து தெளிக்கத் தேவையில்லை என்பதால் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிா் செய்துவந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் தாக்கம் அதிகரித்து விளைச்சல் குறைந்து போனது. மேலும் கடந்த 8 மாதங்களாக விலையும் உயரவில்லை.

ஒரு ஏக்கா் மக்காச்சோளம் சாகுபடி செய்ய ரூ. 27 ஆயிரம் செலவாகிறது. ஏக்கருக்கு 30 குவிண்டால் விளைச்சல் கிடைத்து விலையும் ரூ. 2 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்யப்பட்டால், செலவு போக ரூ. 30 ஆயிரம் வருமானம் கிடைக்கும். நடப்பு சீசனில் விலை மிகவும் குறைவாக உள்ளாலும், படைப்புழுக்கள் பிரச்னை உள்ளதாலும் சாகுபடி பரப்பு இந்தப் பகுதியில் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.