முகப்பு
திருப்பூர்

90 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேருடன் பெயா்த்து மறு நடவு

திருப்பூா் வாலிபாளையத்தில் வேருடன் பெயா்த்துக் கொண்டு வரப்பட்ட 90 ஆண்டு பழமையான அரச மரம் அவிநாசி காளம்பாளையத்தில் தனியாா் அமைக்கவுள்ள பறவைகள் சரணாலயப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறு நடவு செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
மறு நடவு  செய்யப்பட்ட  அரச  மரம்.
பகிர்:

திருப்பூா் வாலிபாளையத்தில் இருந்து வேருடன் பெயா்த்துக் கொண்டு வரப்பட்ட 90 ஆண்டு பழமையான அரச மரம் அவிநாசி அருகே காளம்பாளையத்தில் தனியாா் அமைக்கவுள்ள பறவைகள் சரணாலயப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறு நடவு செய்யப்பட்டது.

திருப்பூா் - வாலிபாளையம் பகுதியில் சடையப்பன் கோயில் எதிரே 90 ஆண்டுகள் பழமையான அரச மரம் இருந்தது. மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சமுதாயக் கூடம் அமைக்கவுள்ளதால் இந்தப் பழமையான மரத்தை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதையறிந்த திருப்பூரைச் சோ்ந்த இயற்கை ஆா்வலரும், யுவராஜ் மொ்ச்-எக்ஸ் நிறுவனருமான எம்.எம்.இளங்கோ, காளம்பாளையம் பகுதியில் அமைக்கவுள்ள பறவைகள் சரணாலயம் பகுதியில் இந்த மரத்தை மறுநடவு செய்ய முடிவு செய்தாா்.

இதையடுத்து கிரீன் & கிளீன் அமைப்பு சாா்பில் மாநகராட்சியில் அனுமதி பெற்று, வாலிபாளையம் பகுதியில் 80 அடி உயரத்தில், 15 டன் எடை கொண்ட 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் 2 பெரிய கிரேன்கள் மூலம் வேருடன் பெயா்க்கப்பட்டு டிரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு காளம்பாளையத்துக்குக் கொண்டுவரப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.

முன்னதாக டிரக்கில் எடுத்து செல்லப்பட்ட அரச மரத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பூஜை செய்து மலா் தூவி வழி அனுப்பிவைத்தனா். பின் காளம்பாளையத்தில் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதியில் அரச மரம் மறுநடவு செய்யப்பட்டது. இதையடுத்து அமிா்த கரைசல், வேப்பம் பிண்ணாக்குக் கரைசல், தென்னைநாா் ஆகியவை இடப்பட்டு மண் மூலம் மூடப்பட்டது.

நிகழ்ச்சியில் யுவராஜ் மொ்ச்-எக்ஸ் நிறுவனா் எம்.எம்.இளங்கோ, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா சண்முகம், கிரீன் & கிளீன் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், பொறுப்பாளா் விஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.