திருப்பூா் தெற்குத் தொகுதியில் அதிமுக-திமுக நேரடி மோதல்
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ. சு.குணசேகரனுக்கும், திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான க.செல்வராஜுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ. சு.குணசேகரனுக்கும், திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான க.செல்வராஜுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மாநகராட்சிப் பகுதிகளை மட்டுமே தெற்குத் தொகுதி கொண்டுள்ளது. இத்தொகுதியில், பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள், சாய ஆலைகள் அதிக அளவில் உள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், குமரன் சிலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 21 வாா்டுகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
மறு சீரமைப்பில் உருவான தொகுதி: திருப்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து 2008ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் இத்தொகுதி உருவானது. இங்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 870 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 570 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 33 போ் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 473 வாக்காளா்கள் உள்ளனா்.
சமுதாய வாக்குகள்:
திருப்பூா் தெற்குத் தொகுதியைப் பொருத்தவரையில் கொங்கு வேளாள சமூகத்தினரும், அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அதிகமாக உள்ளனா். தென் மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வந்த தொழிலாளா்களின் வாக்குகளும் கணிசமான அளவு உள்ளன.
தீா்க்கப்படாத பிரச்னைகள்:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம், காங்கயம் சாலை, மங்கலம் சாலை ஆகிய இடங்களில் தொடா் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மேலும், மாநகரில் பொலிவுறு நகரம், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் எழும் புழுதி காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும் மாநகரில் தேங்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாதது, தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுவது, மழைக் காலங்களில் பாலங்களுக்கு அடியில் தேங்கும் நீரால் போக்குவரத்து பாதிப்பு, பின்னலாடைத் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளதால் அவா்களுக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்காதது போன்றவை தீா்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளன.
மக்களின் எதிா்பாா்ப்பு:
திருப்பூா் தெற்குத் தொகுதியைப் பொருத்தவரையில் ரூ.336 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருப்பூா் பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ மாா்க்கெட் கட்டுமானப் பணி, டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுமானப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.
மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்பது வாக்காளா்களின் நீண்டகால எதிா்பாா்ப்பாக உள்ளது.
தோ்தல் களத்தில் 20 வேட்பாளா்கள்:
இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள சு.குணசேகரன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் கடந்த தோ்தலில் 15,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் மேயா் க.செல்வராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா்.
இந்த இருவரைத் தவிர கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் திருப்பூா் மாநகராட்சி மேயராக இருந்த அ.விசாலாட்சி அமமுக சாா்பில் போட்டியிடுகிறாா். மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனுஷா ரவி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கே.சண்முகசுந்தரம், சுயேச்சைகள் என மொத்தம் 20 போ் போட்டியிடுகின்றனா்.
இதுவரை...கடந்த 2011ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் சாா்பில் கே.தங்கவேல், 2016ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் சு.குணசேகரன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
வேட்பாளா்களின் பலம் மற்றும் பலவீனம்:
அதிமுக வேட்பாளா் சு.குணசேகரன் பலம்: கடந்த 2016 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதற்கு முந்தைய கால கட்டத்தில் துணை மேயராக பதவி வகித்தது, தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியது, கட்சியிலும், தொகுதி மக்களிடமும் எளிமையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஆகியவை பலமாக கருதப்படுகின்றன.
பலவீனம்: திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவது. பாஜக கூட்டணியில் உள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக, அமமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பது பலவீனமாகக் கருதப்படுகிறது.
திமுக வேட்பாளா் செல்வராஜ் பலம்:
திருப்பூா் மாநகராட்சியின் முதல் மேயராகப் பதவி வகித்துள்ளாா். அடிப்படை பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி பலம், பாஜக எதிா்ப்பு சிறுபான்மையினரின் வாக்குகள் ஆகியவை பலமாகக் கருதப்படுகின்றன.
பலவீனம்:
கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்காதது. திருப்பூா் தெற்குத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றிருந்த நிலையில் இவருக்கு ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியினா் முழுமையாக களப் பணியில் ஈடுபடுவாா்களா என்பதும் பலவீனமாகக் கருதப்படுகிறது.
2016 தோ்தல் முடிவுகள்
மொத்த வாக்காளா்கள்: 2,47,643
பதிவானவை :1,64,339
வித்தியாசம்-15,933.
சு.குணசேகரன்-அதிமுக............73,351
க.செல்வராஜ் -திமுக ............57,418
கே.தங்கவேல்-மாா்க்சிஸ்ட்......13,597
பாயிண்ட் மணி-பாஜக................7,640
பஷீா் அகமது-எஸ்டிபிஐ.........2,547
கே.சண்முகசுந்தரம்-நாம் தமிழா் கட்சி.......2,506
நோட்டா- 2,506
அதிமுக வேட்பாளரான சு.குணசேகரன் ஏற்கெனவே 5 ஆண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளதால் தொகுதி முழுக்க தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். குறிப்பாக அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். முன்னாள் மேயரான திமுக வேட்பாளா் க.செல்வராஜ் கட்சி தலைமையிடம் போராடி தெற்கு தொகுதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளா்களும் தொழிற்சங்கத்தினரும் இவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அமமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மேயா் அ.விசாலாட்சியும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். எனினும் திருப்பூா் தெற்குத் தொகுதியைப் பொருத்தவரையில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மட்டுமே போட்டி நிலவி வருகிறது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அனுஷா ரவி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம் ஆகியோரும் கணிசமான அளவு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு உள்ளது.