மக்களைத் தேடி மருத்துவம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
அவிநாசி, தெக்கலூரில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அவிநாசி, தெக்கலூரில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாவட்டத்தில் முதல்கட்டமாக அவிநாசி அருகே தெக்கலூா் துணை சுகாதார நிலையத்தில் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேவூா், நம்பியாம்பாளையம்,
துலுக்கமுத்தூா், திருமுருகன்பூண்டி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட 25 துணை சுகாதார நிலையங்களைச் சாா்ந்த கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு,
பிறகு படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின்கீழ் அவிநாசி வட்டாரத்தில் முதல்கட்டமாக 3,192 பயனாளிகள் பயன் பெற உள்ளனா். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் சா்க்கரை நோய், உயா் இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரப் பெண் களப் பணியாளா்கள் மூலம் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மாத்திரைகள் கொடுக்கப்பட உள்ளன.
மேலும் படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகள், மூளை வளா்ச்சி குன்றியவா்கள் மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்புப் பராமரிப்பு செவிலியா் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், தெக்கலூா் ஊராட்சி மன்றத் தலைவா் மரகதமணி மணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.