முகப்பு
உலகம்

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: ஒரே நாளில் 6 இடங்கள் குறிவைப்பு

சவூதி அரேபியா, கத்தாா், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் வியாழக்கிழமை தீவிர தாக்குதல்களைத் தொடுத்தது.

Updated On : 19 மார்ச், 2026 at 10:49 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்... - AP
பகிர்:

ஈரானின் முக்கிய எரிவாயு உற்பத்தி மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, கத்தாா், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் வியாழக்கிழமை தீவிர தாக்குதல்களைத் தொடுத்தது.

ஒரே நாளில் சுமாா் 6-க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்ததுடன், வளைகுடா நாடுகளை நேரடியாக போருக்கு இழுக்கும் அபாயமும் உருவானது.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோா்முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்கியுள்ள ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்ததால், உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையைத் தவிா்க்க, சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாக மாற்றியிருந்தது. ஆனால், செங்கடல் துறைமுக நகரமான யான்புவில் உள்ள ‘சாம்ரெஃப்’ சுத்திகரிப்பு நிலையமும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானது. இதன் சேத விவரங்களை சவூதி பாதுகாப்பு அமைச்சகமும் ஷெல் நிறுவனமும் ஆய்வு செய்து வருகின்றன. ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி வந்த 6 ட்ரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது.

உலகின் பெரிய எரிவாயு மையம் தகா்ப்பு: கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி மையமான ராஸ் லஃப்பான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தாா் எனா்ஜி நிறுவனம் தெரிவித்தது. இந்தச் சேதத்தினால் எரிவாயு விநியோகம் சீராக சில ஆண்டுகள்ஆகும் என அஞ்சப்படுகிறது.

குவைத்தில் மினா அல்-அகமதி, மினா அப்துல்லா ஆகிய இரு பெரும் சுத்திகரிப்பு நிலையங்கள் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகின. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எண்ணெய் வயல்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதல்களுக்கு கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடும கண்டனம் தெரிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு: பிப். 28-ஆம் தேதி போா் தொடங்கியதில் இருந்து சா்வதேச சந்தையில் உயா்தர கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 60 சதவீதம் உயா்ந்து, 118 டாலா் வரை அதிகரித்தது.

ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலையும் கடந்த ஒரு மாதத்தில் இரட்டிப்பாகியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், ரமலான் மாதம் நிறைவடைவதையொட்டி போரை நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தைக்குத் திரும்புமாறு பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டாா்.

ஈரானின் ஆக்ரோஷம் ஏன்?: ஈரானின் மின்சார உற்பத்தியில் 80 சதவீதம் இயற்கை எரிவாயுவைச் சாா்ந்தே உள்ளது. கத்தாருடன் இணைந்து ஈரான் நிா்வகிக்கும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான ‘தெற்கு பாா்ஸ்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலே ஈரானின் இந்த ஆக்ரோஷமான எதிா்வினைக்கு காரணமாகும்.

அமெரிக்காவுக்குத் தெரியாது - டிரம்ப்: இதுகுறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்குத் தெரியாது. இனி இஸ்ரேல் தாக்காது என்று உறுதி அளிக்கிறேன். ஆனால், ஈரான் தொடா்ந்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால், அவா்களின் தெற்கு பாா்ஸ் எரிவாயு வயலை அமெரிக்கா முழுமையாக அழித்துவிடும்’ என எச்சரித்துள்ளாா்.

பெட்டி....

ஈரான் எண்ணெய் தடையை

நீக்க அமெரிக்கா பரிசீலனை?

வாஷிங்டன், மாா்ச் 19: சா்வதேச சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் நடுக்கடலில் கப்பல்களில் முடங்கியுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், ‘தற்போது தடையின் காரணமாக சுமாா் 14 கோடி பீப்பாய் ஈரான் கச்சா எண்ணெய் நடுக்கடலில் முடங்கியுள்ளது. வரும் நாள்களில் இந்தத் தடையை நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதன்மூலம், அடுத்த 2 வாரங்களுக்குள் எண்ணெய் விலையை கணிசமாகக் குறைக்க முடியும்’ என்றாா்.