தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழக அரசு நிதி ஆதாரத்தை பெருக்க லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
தமிழக அரசு நிதி ஆதாரத்தை பெருக்க லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு நிதி திரட்டலுக்காக பொதுத் துறை சொத்துகளை குத்தகை என்ற பெயரில் தனியாருக்கு விற்பனைச் செய்யும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஐரோப்பிய நாடுகளில் கல்வி, சுகாதாரம் இரண்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுபோல இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு கல்வி, சுகாதாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். இதற்குத் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்க தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இதன் மூலம் அரசுக்கு நிதி கிடைப்பதோடு, ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட நாட்டில் 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது என்றாா்.