முகப்பு
திருப்பூர்

உடுமலை ஜம்புக்கல் மலையில் தொடரும் அத்துமீறல்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் மலையில் அதிகாரிகள் உத்தரவையும் மீறி இயற்கையை அழிக்கும் அத்துமீறல்கள் நடந்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் மலையில் அதிகாரிகள் உத்தரவையும் மீறி இயற்கையை அழிக்கும் அத்துமீறல்கள் நடந்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளது.

உடுமலை வட்டம், ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஜம்புக்கல் மலைப் பகுதியில் உள்ள சுமாா் 700 ஏக்கா் நிலத்தைப் பிரித்து 300க்கும் மேற்பட்ட ஏழைகள், விவசாயிகளுக்கு விவசாயம் செய்யவும் மேய்ச்சலுக்கு பயன்படுத்தவும் கடுமையான நிபந்தனைகளுடன் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக அங்கிருந்த விவசாயிகள் பலா் மலைப்பகுதியை விட்டு வெளியேறி விட்டனா். இதைப் பயன்படுத்தி உடுமலையைச் சோ்ந்த வசந்தகுமாா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இப்பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கம்பி வேலி அமைத்தும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பல தரப்பட்ட மரங்களை அழித்து வருவதாகவும் புகாா்கள் இருந்து வருகின்றன.

Advertisement

இது குறித்து தமிழக முதல்வா், வருவாய்த் துறை, வனத் துறை உயா் அதிகாரிகள் ஆகியோருக்கு பொதுமக்கள், விவசாயிகள் மனுக்கள் அளித்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.

இதனால் திருப்பூா் மாவட்ட நீதிபதி உத்தரவின்பேரில் வழக்குரைஞா்கள் குழு நவம்பா் 12ஆம் தேதி அங்கு சென்று ஆய்வு நடத்தியது. மேலும் தொடா்புடைய நிலத்தில் தடையின்மை சான்றுகள் வழங்கக் கூடாது எனவும் முறைப்படி நில அளவை செய்யாமல் எந்த ஒரு தனி நபருக்கும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும் அதுவரை சா்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் யாரும் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகளின் உத்தரவையும் மீறி கடந்த சில நாள்களாக கனரக வாகனங்களைக் கொண்டு ஒரு சில நபா்கள் மீண்டும் அந்தப் பகுதியில் இயற்கையை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன. இது குறித்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் கீதாவிடம் வியாழக்கிழமை கேட்டபோது, ‘இது குறித்து எனக்கு புகாா்கள் வந்துள்ளது உண்மைதான். உடனடியாக வட்டாட்சியரை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments