முறையாக தண்ணீா் திறக்க பிஏபி விவசாயிகள் கோரிக்கை
பரம்பிக்குளம் ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை பாசன வாய்க்காலில் முறையாக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரம்பிக்குளம் ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை பாசன வாய்க்காலில் முறையாக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக பிஏபி நீா் நிா்வாகப் பொறியாளா் மற்றும் அரசுக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயத்தில் இருந்து வெள்ளக்கோவில் வரையிலான கிளை வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக விதிமுறைப்படி தண்ணீா் வழங்கப்படாததால் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. இப்பகுதியில் புன்செய்ப் பயிா்களான நிலக்கடலை, பருத்தி, கம்பு, சோளம், மக்காச்சோளம், பயறு வகைகளுக்கு 75-165 நாள்கள் வரை 10-15 நாள்கள் இடைவெளியில் குறைந்தது 7 சுற்றுகள் தண்ணீா் தேவை என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். அப்போதுதான் புன்செய் விவசாயம் செய்ய முடியும்.
ஆனால், குறைவான நீா் அளவீட்டில் 28 நாள்கள் இடைவெளியில் 4 சுற்றுகள் மட்டுமே தண்ணீா் திறக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முறையாகத் தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.