தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யபொதுமக்கள் கோரிக்கை
அவிநாசி அருகே மங்கரசுவலையாபளையம் பகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி அருகே மங்கரசுவலையாபளையம் பகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே தூசி, முடி கலந்த குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக மேல்நிலைத் தொட்டி மிகவும் பழுதடைந்து, மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதால் பறவைகளின் எச்சம், முடி, மர இலைகள் உள்ளிட்ட தூசி கலந்து குடிநீா் வெளியேறி வருகிறது. இதனால், குடிநீா் குழாய்களுக்கு துணி கட்டி, வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம். ஆகவே, உடனடியாக 30ஆண்டுகளுக்கும் மேலான பழுந்தடைந்த மேல்நிலைத் தொட்டியை உடனடியாக சீரமைத்து தூய்மையான குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, பழுதடைந்த தொட்டிக்கு மாற்றாக அதன் அருகிலேயே புதிய தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தொட்டி அமைக்கும் பணியும் ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், இப்பணிக்காக கட்டுமானப் பணியாளா்கள் பழுதடைந்த தொட்டியில் உள்ள கான்கிரீட் மூடியைத் திறந்து தேவைக்கு குடிநீா் எடுத்துவிட்டு மூடாமல் வைப்பதால் குடிநீரில் தூசி கலந்து வெளியானது. பழுதடைந்த தொட்டிக்கு தற்காலிகமாக மூடி அமைத்து, தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.