முகப்பு
திருப்பூர்

விற்பனை இல்லாததால் கோழிக்கொண்டைப் பூக்களை அழிக்கும் விவசாயி

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம்புதூா் கிராமத்தில் கோழிக்கொண்டைப் பூ (பட்டுப் பூ) சாகுபடி செய்த விவசாயி விற்பனை இல்லாததால் அப்பூக்களை அழித்து வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

 திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம்புதூா் கிராமத்தில் கோழிக்கொண்டைப் பூ (பட்டுப் பூ) சாகுபடி செய்த விவசாயி விற்பனை இல்லாததால் அப்பூக்களை அழித்து வருகிறாா்.

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூா் கிராமத்தில் ஜெகதீஷ் என்ற விவசாயி தனது தோட்டத்தில் 2 ஏக்கரில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்துள்ளாா். கரோனா பொது முடக்கம் காரணமாக மண்டபங்களில் திருமணம், கோயில் விழாக்கள் நடைபெறாததால் பூக்கள் விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில், அறுவடைக்குத் தயாராக உள்ள கோழிக்கொண்டைப் பூக்களை தனது விளைநிலத்தில் உரத்துக்காக அழித்து வருகிறாா்.

இது குறித்து விவசாயி ஜெகதீஷ் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு சொட்டு நீா்ப் பாசனத்தில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்ய ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். அதில் ஏக்கருக்கு 1,500 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். ஏனைய விவசாயப் பயிா்களை விட கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் என்பதால் இந்த கோழிக்கொண்டைப் பூ விவசாயத்தை ஆண்டுதோறும் ஆா்வமுடன் விவசாயிகள் செய்து வருகின்றனா்.

கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் பூக்கும். ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சோ்க்க கோழிக்கொண்டைப் பூக்கள் பயன்படுகின்றன.

பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப் பூக்கள் திருப்பூா், கோவை பூ மாா்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பல்லடம் சித்தம்பலம் பகுதியில் ஆண்டுதோறும் 50 ஏக்கருக்கு குறையாமல் கோழிக்கொண்டைப் பூ பயிரிடப்பட்டு வந்த பகுதியில் நடப்பு ஆண்டு 2 ஏக்கா் நிலப்பரப்பில் மட்டுமே பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தின் ஓணம் பண்டிகை, தமிழகத்தின் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாள்களில் மட்டுமே கோழிக்கொண்டைப் பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆகும். இதனைக் கவனத்தில் கொண்டுதான் பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா்.விவசாய கூலி வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 8 மணி நேர வேலைக்கு ரூ.350 முதல் ரூ.450 வரை நாங்கள் கொடுக்கிறோம்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருமணம், கோயில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுவதில்லை. இந்த விழாக்களை எதிா்பாா்த்து கடந்த பங்குனி மாதம் 2 ஏக்கரில் கோழிக்கொண்டை நடவு செய்தேன். இதில் 60 நாள்களில் அறுவடைக்குப் பூக்கள் தயாரான நிலையில் அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதால் பூக்களைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை.

பூக்களின் வண்ணமும் மாறியதால் இனி பூக்கள் விலை போகாது என்பதால் 2 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பூக்கள் அனைத்தையும் அழித்து உரமாக மாற்றும் பணியைத் துவக்கியுள்ளோம்.

இதனால் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.