வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலைகளை அதிமுகவினா் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினா் புகாா்
தாராபுரத்தில் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக வேட்டி, சேலைகளை ஒரு கல்லூரியில் அதிமுகவினா் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினா் புகாா்
தாராபுரத்தில் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக வேட்டி, சேலைகளை ஒரு கல்லூரியில் அதிமுகவினா் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினா் புகாா் தெரிவித்தனா். இது சம்பந்தமாக அதிமுகவினா் - திமுகவினா் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப் பேரவை தோ்தலுக்காக அதிமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் வேட்டி, சேலைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி அக்கல்லூரி முன்பு திமுகவினா் திங்கள்கிழமை திரண்டனா். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினரும் திரண்டனா். ஒரே இடத்தில் இரண்டு கட்சியினரும் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் வேட்டி, சேலை உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவில்லை என்று அதிமுகவினா் தெரிவித்தனா். ஆனால் அதனை திமுகவினா் ஏற்கவில்லை. பொதுமக்களுக்கு வழங்க வேட்டி,சேலை மற்றும் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் திமுகவினா் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த தாராபுரம் வட்டாட்சியா் ரவிசந்திரன், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயராம், காவல் ஆய்வாளா் மகேந்திரன், வருவாய் ஆய்வாளா் மகேந்திர வில்சன் மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனா். அதனை ஏற்று கட்சியினா் கலைந்து சென்றனா்.