நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி, விசைத்தறி மற்றும் கைத்தறி ஆகிய ஜவுளித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கு மூலப் பொருளாக இருக்கும் நூல் விலை கடந்த செப்டம்பா் மாதம் முதல் கடுமையாக உயா்ந்து வருகிறது. கடைசியாக திங்கள்கிழமை (மாா்ச் 1) கிலோவுக்கு ரூ. 10 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ. 62 உயா்ந்துள்ளது.
இதனால் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றன. இதன்தொடா்ச்சியாக தொழிலாளா்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் வருமான இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு முன்கூட்டியே வெளிநாட்டு வா்த்தகா்களிடம் விலைப்பேசி நிா்ணயித்து விடுகின்றனா். ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நூல் விலை உயா்வால் கட்டுப்படியான விலையில் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியாமல் ஆா்டா்கள் கையைவிட்டுச் செல்வதால் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.