தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்
ஆயத்த ஆடை நிறுவனங்கள் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
ஆயத்த ஆடை நிறுவனங்கள் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் மத்திய அரசின் நோ்மறை மற்றும் வளா்ச்சி சாா்ந்த நடவடிக்கைகள் காரணமாக ஆயத்த ஆடைத் துறை ஓரளவு மீளமுடிந்தது. எனினும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பல்வேறு சவால்கள் நீடித்து வருகின்றன.
கரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னா் அதாவது 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையில் இந்தியாவின் ஆடை ஏற்றுமதியானது 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் தடை காலத்துக்கான வட்டியை மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாடுகளில் கரோனாவின் 2ஆவது அலை உள்ளிட்ட காரணங்களால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஆகவே, ஆயத்தை ஆடை நிறுவனங்கள் வாங்கிய கடன்களின் தடைக் காலத்துக்கான வட்டி செலுத்தும் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பா் வரையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.