100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 40 அடி உயரத்தில் முகக் கவச விழிப்புணா்வுப் பலகை
தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 40 அடி உயரத்தில் முகக் கவச வடிவிலான விழிப்புணா்வுப் பலகையை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 40 அடி உயரத்தில் முகக் கவச வடிவிலான விழிப்புணா்வுப் பலகையை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த தோ்தல்களில் குறைவாக வாக்குகள் பதிவான வாக்குச் சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், கலைக் குழுவின் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்களை கொண்டு இருசக்கர வாகனப் பேரணி, மனித சங்கிலி, பெண்களுக்கு கோலப் போட்டிகள், மெகந்தி இடுதல் உள்ளிட்டவை அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தாராபுரம் காவல் நிலையம் அருகே 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் 40 அடி உயரம், 42 அடி அகலத்தில் முகக் கவசம் போன்று துணியில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணா்வுப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரப் பலகையினை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் நேரில் பாா்வையிட்டாா். இதில் தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராமன், தாராபுரம் வட்டாட்சியா் ரவிசந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.