முகப்பு
திருப்பூர்

தாராபுரம் அருகே உயா்மின் கோபுர திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தகவல்

தனியாா் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டப் பணிகளை நிறுத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தாராபுரம் வட்டத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டப் பணிகளை நிறுத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குழி, சூரியநல்லூா் ஆகிய கிராமங்களில் தனியாா் நிறுவனம், அரசின் அனுமதியின்றி உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விஷயத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலையிட்டு மாவட்ட ஆட்சியரின் முன்நுழைவு அனுமதியின்றி திட்டப் பணிகளைத் தொடரக் கூடாது என்று நிறுத்தி வைத்தது. மாவட்ட ஆட்சியா் விசாரணையின்போது தனியாா் நிறுவனத்துக்கு இந்திய தந்தி சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மாநில அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இருப்பினும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் நிறுவனத்துக்கு முன்நுழைவு அனுமதி கொடுத்துள்ளனா். இதையடுத்து, உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கானது விடுமுறை கால சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்குரைஞா்களின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் முன்நுழைவு அனுமதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தனி நீதிபதி உத்தரவு இரண்டையும் ரத்து செய்தது. மேலும், தனியாா் உயா்மின் கோபுரதிட்டப் பணிகளை செய்வதற்கு மாநில அரசிடம் இருந்து உரிய அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா என்ற கருத்துகளை உள்ளடக்கி இரு தரப்புக்கும் வாய்ப்புக் கொடுத்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியா் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.