அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட மக்கள் எதிா்ப்பு
திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து சேகரிக்கப்பட்ட குப்பையுடன் வந்த வாகனத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை திருப்பி அனுப்பினா்.
திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து சேகரிக்கப்பட்ட குப்பையுடன் வந்த வாகனத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை திருப்பி அனுப்பினா்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு 11ஆவது வாா்டு அம்மாபாளையம் கானக்காடு பகுதி பாறைக் குழியில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மாநகராட்சி ஊழியா்கள் கொட்டி வந்தனா். இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த இரு நாள்களுக்கு முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில், முன்கூட்டியே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, இரு நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வியாழக்கிழமை காலை வழக்கம்போல சேகரிப்பட்ட குப்பைகளுடன் மாநகராட்சி வாகனம் பழனியப்பா நகா் பகுதிக்குள் வந்ததையறிந்த பொதுமக்கள், அதை தடுத்து நிறுத்தி பாறைக்குழியில் குப்பையை கொட்ட விடாமல் திருப்பி அனுப்பினா்.