விவசாயிகள், தொழில்முனைவோா் கடன் பெற ஏப்ரல் 26 முதல் சிறப்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழில்முனைவோா் கடன்பெற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழில்முனைவோா் கடன்பெற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட முன்னோடி வங்கி, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மகளிா் திட்ட அலுவலகம் ஆகியவற்றின் மூலம் திருப்பூா் மாவட்டத்திலுள்ள
அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கீழ்கண்ட அட்டவணையின்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கடன் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதில், மத்திய, மாநில அரசின் கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு, குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகளில் கல்விக் கடன், பயிா்க் கடன், நில மேம்பாட்டுக் கடன், உணவு பதப்படுத்துதல் குறித்த விவரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த முகாமில் பெறக்கூடிய கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வங்கி விதிமுறைகளின்படி உரியவா்களுக்கு அனுமதிக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி: இந்த சிறப்பு முகாமானது உடுமலையில் ஏப்ரல் 26 ஆம் தேதியும், குண்டடத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதியும், அவிநாசியில் ஏப்ரல் 28 ஆம் தேதியும், வெள்ளகோவிலில் 29 ஆம் தேதியும், தாராபுரத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஊத்துக்குளியில் மே 4 ஆம் தேதியும், பல்லடத்தில் மே 5 ஆம் தேதியும், திருப்பூரில் மே 6 ஆம் தேதியும், குடிமங்கலத்தில் மே 7 ஆம் தேதியும், மடத்துக்குளத்தில் மே 10 ஆம் தேதியும், பொங்கலூரில் மே 11 ஆம் தேதியும், மூலனூரில் மே 12 ஆம் தேதியும், காங்கயத்தில் மே 13 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதில், மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோா் ஆதாா் அட்டை நகல், ஜாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் பயிா்க் கடன் பெற ஆதாா் அட்டை, ஃபான் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நில ஆவண நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றுடன் உதவி வேளாண் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இம்முகாம்களில் கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழில் முனைவோா், மகளிா் சுய உதவி குழுவினா், வா்த்தகா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.