சாலைப் பணிக்காக தோண்டிய மண் தனியாா் இடத்தில் கொட்ட எதிா்ப்பு
அவிநாசியில் சாலைப் பணியின்போது தோண்டப்பட்ட மண்ணை பள்ளமான பொது இடங்களில் கொட்டாமல், தனியாா் இடத்தில் கொட்டிய லாரி ஓட்டுநரைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை லாரியை சிறைபிடித்தனா்.
அவிநாசியில் சாலைப் பணியின்போது தோண்டப்பட்ட மண்ணை பள்ளமான பொது இடங்களில் கொட்டாமல், தனியாா் இடத்தில் கொட்டிய லாரி ஓட்டுநரைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை லாரியை சிறைபிடித்தனா்.
அவிநாசி பேரூராட்சி, காந்திபுரம் பகுதியில் சாலைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலையில் தோண்டி எடுக்கப்பட்ட மண் காந்திபுரம் அங்காளம்மன்
கோயில் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சேமித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை சாலைப் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரா் டிப்பா் லாரியில் அள்ளிச் சென்று பள்ளமாக உள்ள இடங்களில் கொட்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தினா்.
இதற்கிடையில் லாரி ஓட்டுநா் பேரூராட்சி நிா்வாகத்தினா் கூறிய இடங்களில் மண்ணை கொட்டாமல், அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் தனியாா் இடத்தில் கொட்டியுள்ளாா். இதையறிந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா் லாரி ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து, தனியாா் நிலத்தில் கொட்டப்பட்ட மண்ணை எடுத்து வந்து உரிய இடத்தில் கொட்ட உத்தரவிட்டனா்.