முகப்பு
திருப்பூர்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள்கள் உற்பத்தி நிறுத்தம்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் திங்கள்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள்.
பகிர்:

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது  கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்ந்தது. இந்த நூல் விலை உயர்வுக்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்களை அனுப்பியும், போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கிலோவுக்கு ரூ.10 குறைந்திருந்தது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நூல் விலையானது மீண்டும் கிலோவுக்கு ரூ.30 வரையில் உயர்ந்துள்ளது. இதையடுத்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் பரி ஜனவரி 17, 18ம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நூற்பாலை உரிமையாளர்கள் பஞ்சு விலையைக் காரணம் காட்டி நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு 11 சதவீத வரி விதித்துள்ளதை காரணம் காட்டியே பஞ்சு, நூல் விலையை உயர்த்தி வருகின்றனர்.ஆகவே, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், அதனைச்சார்ந்த நிட்டிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ரைசிங், ஸ்டிச்சிங் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் நிறுவனங்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபடவுள்ளன.

இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி என இரு நாள்களில் சுமார் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படும் என்று திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.