பொது வேலை நிறுத்தத்தைவெற்றி பெறச் செய்ய வேண்டும்: அனைத்து பனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் 2 நாள்கள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அனைத்து பனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் 2 நாள்கள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அனைத்து பனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் அனைத்து பனியன் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளா் சட்டத் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். அமைப்புசார தொழிலாளா் நலவாரியங்களை முடக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ சாா்பில் சம்பத், எல்பிஎஃப் சாா்பில் பாலசுப்பிரமணியம், எம்எல்எஃப் சாா்பில் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.