வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்!
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டன.
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு திங்கள்கிழமை இரவு பூட்டி சீலிடப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, முதல்நிலை சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு காப்பறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை ஒதுக்கப்பட்டன.
அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் 387 வாக்குச்சாவடிகளுக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளுக்கும் என மொத்தம் 732 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 464 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 491 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,419 கருவிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, ஒதுக்கப்பட்ட இயந்திரங்கள் பெரம்பலூா் கோட்டாட்சியரகத்துக்கும், வேப்பூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
பின்னா், பெரம்பலூா் (தனி )சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளை, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பறையிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள், வேப்பூா் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியிலும் உள்ள பாதுகாப்பறையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வைத்துப் பூட்டி சீலிடப்பட்டன.
இந்த பாதுகாப்பு அறைகள் 24 மணி நேரமும் காவல் துறையினரின் பாதுகாப்பில், சி.சி.டிவி கண்காணிப்புடன் பாதுகாக்கப்படுகின்றன. மேற்கண்ட பாதுகாப்பு அறைகளை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, பாா்வையாளா்களுக்காக வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.
நிகழ்ச்சிகளின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு.அனிதா(பெரம்பலூா்), சக்திவேல் (குன்னம்) மற்றும் வட்டாட்சியா்கள் உடனிருந்தனா்.