பெரம்பலூரில் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் 387 வாக்குச்சாவடி மையங்களுக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களுக்கும் என மொத்தம் 732 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 464 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 491 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,419 கருவிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
இந் நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா் கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.