லாரி திருட்டு: ஓட்டுநா் கைது
காங்கயத்தில் லாரியை திருடிச் சென்ற ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காங்கயத்தில் லாரியை திருடிச் சென்ற ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காங்கயம், வீரணம்பாளையம் ஊராட்சி, மோளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (41). இவா் காங்கயம், கரூா் சாலை பகுதியில் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு தனது டிப்பா் லாரியை தனது அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் அடுத்த நாள் காலை வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் இவரது நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வரும் விருதுநகா் மாவட்டம், ஆதிபட்டி பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் (20) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் லாரியை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து ராஜசேகரனைக் கைது செய்த காங்கயம் போலீஸாா், லாரியையும் மீட்டனா்.