ரஷியா-உக்ரைன் போா் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை உயா்ந்து வருவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.
தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 39 ஆவது வணிகா்கள் விடியல் மாநில மாநாடு திருச்சியில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றும் இந்த மாநாட்டில் 17 லட்சம் வணிகா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயா்த்தப்படவில்லை.
அதேவேளையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சன்பிளவா் ஆயில், பாமயில் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெயை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இத்தகைய சட்டங்களால் சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா். ஆகவே, இந்த சட்டங்களில் சில தளா்வுகளை அளிப்பதுடன், சமையல் எண்ணெய்யை பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற்பனை செய்வதன் மூலமாக உற்பத்தியாளா்களுக்கு லாபம் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்ய முடியும்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த சுங்கச் சாவடிகளில் வணிகா்களின் பொருள்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.
தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி மாா்க்கெட், வணிகப் பொருள் மாா்க்கெட் கட்டடங்களை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.